இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவித்தல்
இலங்கை
இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரம் வழங்கும் உத்தியோகபூர்வ இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்தத் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், முன்னதாகவே இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரத்தைப் (ETA) பெற்றுக்கொள்ளாமல் விமானங்களில் ஏறுவதற்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தத் தற்காலிகச் சலுகை பாகிஸ்தான், கமரூன், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்குப் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகைக்குத் தகுதிபெறும் பயணிகள் இலங்கைக்கு வந்தடைந்ததன் பின்னர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அல்லது ஏனைய உரிய நுழைவாயில்களில் வைத்துத் தமது ETA அல்லது சுற்றுலா வீசாவைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தற்காலிக சலுகையானது இலங்கைக்குள் நுழைவதற்கான வீசா தேவைகளை முழுமையாக நீக்குவதாக அமையாது என திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டிற்குள் வருகை தரும் அனைத்துப் பயணிகளும் வழமையான குடிவரவுப் பரிசோதனைகளுக்கும், உரிய வீசா மற்றும் ETA நிபந்தனைகளுக்கும் உட்படுத்தப்படுவர்.
அத்துடன், பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பது குறித்த இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் குடிவரவு அதிகாரிகளிடமே உள்ளது.
கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பி, சாதாரண நடைமுறைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் அது குறித்துச் சுற்றுலாப் பயணிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.






















