அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது
இலங்கை
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர சத்துர’ (மோதர நிபுணவின் சகோதரர்) மற்றும் ‘புளூமெண்டல் சங்கா’ ஆகிய இரு குற்றவாளிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேற்று (13) இரவு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிய இவர்கள் இருவரும் அபுதாபியில் தலைமறைவாக இருந்த போதே அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து விசேட பாதுகாப்புடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் போரின் போது, ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவர்கள் இருவரும் தங்களது கைபேசிகளில் வைத்திருந்ததாகத் தெரியவருகிறது.
இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய விபரங்களைச் சட்டவிரோதமாகச் சேமித்து வைத்திருந்த குற்றத்திற்காக அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், அங்கு சில காலம் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்தே அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்கள் இருவரையும், அங்கிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
விமான நிலையத்தில் வைத்து அவரிடம் விரிவான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மற்றைய குற்றவாளியான புளூமெண்டல் சங்கா என்பவரை விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தங்களது காவலில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரின் கைது மூலம் இலங்கையில் உள்ள பாதாள உலக நெட்வொர்க் மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் குறித்த பல அதிர்ச்சி தரும் விபரங்கள் வெளிவரும் எனப் பொலிஸார் நம்புகின்றனர்.























