• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை

இலங்கை

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேக நபருக்காக முன்னிலையான சட்டத்தரணி ஆகியோரின் சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை இன்று (12) பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சந்தேக நபரை தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப்  பிணைகளில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், நீதிவான் சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்ததுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாகாணத்திலுள்ள தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை விநியோகிப்பதற்காக 16.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. 

இந்தத் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஷான் விஜயலால் டி சில்வா கைது செய்யப்பட்டார்.

உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாது, தயாரிப்பு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட 16,361 நாற்காலிகளை தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 54 மாகாண சபை உறுப்பினர்களின் வீடு மற்றும்  அலுவலகங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்ததன் ஊடாக, அரசாங்கத்துக்கு இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 

Leave a Reply