• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் நேரம் தாமதித்த விமானம் - நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கனடா

கனடாவில் திட்டமிட்ட நேரத்தை விட சுமார் 16 மணிநேரம் தாமதமாக வான்கூவர் வந்தடைந்த பயணிகள் இருவருக்கு, பிரபல விமான நிறுவனமான வெஸ்ட்ஜெட் மொத்தமாக 2,226.92 டொலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என பிரிட்டிஷ் கொலம்பியா சிவில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் திகதி, கெவின் மற்றும் மேரி ஐசோபல் ஃப்ரேசர் ஆகிய இருவரும் அமெரிக்காவின் மினியாபோலிஸிலிருந்து கனடாவின் ரெஜினா ஊடாக வான்கூவர் நோக்கிப் பயணித்துள்ளனர்.

மினியாபோலிஸிலிருந்து புறப்பட்ட விமானம் ரெஜினாவைச் சென்றடைய ஒரு மணிநேரம் 37 நிமிடங்கள் தாமதமானதால், அவர்களால் வான்கூவர் செல்லும் அடுத்த இணைப்பு விமானத்தைப் பிடிக்க முடியாமல் போனது.

இதனால் அவர்கள் அன்றிரவு ரெஜினாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க நேரிட்டதுடன், மறுநாள் கல்கரி வழியாகச் சுமார் 16 மணிநேரத் தாமதத்திற்குப் பின்னரே வான்கூவரைச் சென்றடைந்தனர்.

கனடாவின் விமானப் பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, 9 மணிநேரத்திற்கும் மேலாக விமானம் தாமதித்தால் பெரிய விமான நிறுவனங்கள் பயணிகளுக்குத் தலா 1,000 டொலர் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

எனினும், வானிலை போன்ற கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலோ அல்லது பாதுகாப்பு நிமித்தமான அவசரப் பராமரிப்புகளாலோ தாமதம் ஏற்பட்டால் விமான நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த விதியைக் காரணங்காட்டி பயணிகளின் நஷ்டஈட்டுக் கோரிக்கையை வெஸ்ட்ஜெட் நிறுவனம் நிராகரித்திருந்தது. பலத்த காற்று காரணமாகப் பொதிகள் ஏற்றும் இயந்திரம் விமானத்தின் சரக்கு வலையைச் சேதப்படுத்தியதாகவும், பாதுகாப்புக் கருதி அதனைச் சரிசெய்ததாலேயே தாமதம் ஏற்பட்டதாகவும் விமான நிறுவனம் தீர்ப்பாயத்தில் வாதிட்டது.

எனினும், விமான நிறுவனம் சமர்ப்பித்த குறைபாடு அறிக்கையை ஆய்வு செய்த தீர்ப்பாய உறுப்பினர் டீன்னா ரிவர்ஸ், அந்த அறிக்கையில் பலத்த காற்று அல்லது மோசமான வானிலை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மாறாக, ஊழியர்களின் கவனக்குறைவால் பொதிகள் ஏற்றும் இயந்திரம் மோதியதாலேயே சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், இது விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும் தவறு என்பதால் இதனைப் பாதுகாப்புக் காரணங்களுக்கான விதிவிலக்காகக் கருத முடியாது என்றும் தீர்ப்பாயம் தீர்மானித்தது.

இதற்கமைய, பயணிகள் இருவருக்கும் தலா 1,000 டொலர் நஷ்டஈட்டுடன், ஹோட்டல் சென்று வர ஆன வாடகைக் கார் கட்டணம், மாற்று விமானத்தில் இருக்கை தரம் குறைக்கப்பட்டதற்கான இழப்பீடு மற்றும் வழக்குச் செலவுகள் உட்பட மொத்தமாக 2,226.92 டொலர்களை வழங்குமாறு வெஸ்ட்ஜெட் நிறுவனத்திற்குத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Reply