AI பயிற்சிக்காக Spirit Airlines தரவுகளை வாங்க Google-க்கு அனுமதி
Google Wins Approval to Buy Spirit AI Data: AI பயிற்சிக்காக Spirit Airlines தரவுகளை வாங்க Google-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திவாலான அமெரிக்க விமான நிறுவனமான Spirit Airlines-இன் தரவுகளை வாங்கும் Google-ன் 10 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்திற்கு நியூயார்க் கூட்டாட்சி திவால் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தரவுகள் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி பெற்றுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், Spirit Airlines நிறுவனத்தின் உள்துறை மின்னஞ்சல்கள், விரிதாள்கள் (Spreadsheets), விமான முன்பதிவு தகவல்கள், அடிக்கடி பயணம் செய்த வாடிக்கையாளர்களின் (Frequent Flyer) தகவல்கள், பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்பான சில தரவுகள் ஆகியவை Google-க்கு மாற்றப்பட உள்ளன.
இந்த தரவுகளை தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த பயன்படுத்தவுள்ளதாக Google தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தனிநபர்களை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் அனைத்தும் அகற்றப்பட்ட பின்னரே தரவுகள் பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலத்தில், குறைந்த கட்டண விமான சேவைகளை வழங்கி வந்த Spirit Airlines தனது அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தியது. நிறுவனத்திற்கு மீட்பு நிதி வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றியடையாத நிலையில் நிறுவனம் செயல்பாடுகளை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எனினும், இந்த தரவு விற்பனைக்கு எதிர்ப்பு குரல்களும் எழுந்தன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விமான பணிப்பெண்கள் சங்கம் (Flight Attendants' Union) இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தது. குறிப்பாக ஊழியர்களின் ரகசிய தகவல்களை பாதுகாக்கும் தெளிவான விதிமுறைகள் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்று சங்கம் கவலை தெரிவித்தது.
இதையடுத்து, ஊழியர் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான புதிய நிபந்தனைகளை Google ஏற்றுக்கொண்டது. இந்த மாற்றங்களுக்குப் பிறகே நீதிபதி ஒப்பந்தத்திற்கு இறுதி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
AI தொழில்நுட்ப வளர்ச்சிக்காக நிறுவனங்கள் பெருமளவில் தரவுகளை தேடி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் தனியுரிமை, தரவு பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.






















