திருமணமான 4 நாட்களில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்; உறவினர்கள் ஷாக்!
திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் 18 லட்சம் மதிப்புள்ள நகையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் இந்தியாவின் அரியானாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்தியாவின் அரியானா மாநிலம் யமுனாநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணுக்கும், பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே கடந்த அக்டோபர் 31 ஆம் திகதி அரியானாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்தவுடன் பெண் , கணவருடன் பிலாஸ்பூரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார். திருமணம் நடந்து நான்கே நாட்களில், அதாவது நவம்பர் 4 ஆம் திகதியன்று அந்தப் புதுப்பெண் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகியுள்ளார்.
அவர் வீட்டை விட்டுத் தப்பியோடும்போது, வீட்டில் பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் 1 லட்சம் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றைத் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் மணமகன் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் புதுப்பெண்ணையும் காணவில்லை, விலைமதிப்பற்ற நகைகளும் பணமும் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தேடிப் பார்த்துள்ளனர்.
எங்கு தேடியும் எவ்விதத் தகவலும் கிடைக்காததைத் தொடர்ந்து, மாப்பிள்ளையின் சகோதரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தலைமறைவான அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















