• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைனில் பரபரப்பு - ஐரோப்பிய அதிகாரிகளை குறிவைக்கும் ரஷ்ய ட்ரோன்கள்

கீவ் நகருக்கு வந்து செல்லும் உக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ரஷ்யா ஆளில்லா வானூர்திகள் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

ரஷ்யாவின் தரைவழிப் போர் தடுமாறி வரும் சூழலில் இந்தத் தாக்குதல்கள் வந்துள்ளன.

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா முன்னர் கைப்பற்றியிருந்த 85 சதுர கிலோமீட்டர் (33 சதுர மைல்) நிலப்பரப்பை, லைமன் நகரைக் கைப்பற்றும் முயற்சியின் போது இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 13 அன்று, போலந்து எல்லையிலிருந்து 5 கி.மீ (3 மைல்) தொலைவில் உக்ரைனின் தொடருந்து இயந்திரம் மீது ரஷ்ய ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தின.

கீவில் நடைபெற்ற யால்டா ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு வோர்சாவுக்குத் திரும்பிய ஐரோப்பிய அதிகாரிகளை இது ஆபத்தில் ஆழ்த்தியது.

பிரித்தானின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய அரசியல், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த தொடருந்தில் பயணம் செய்தனர்.

"இந்த சம்பவம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் கதவுகளை நேரடியாகத் தட்டும் புதினின் பயங்கரவாதம்" என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், செப்டம்பர் 8 அன்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸியின் வானூர்தி கிசினாவ் நகரிலிருந்து புறப்படத் தயாரானபோது ரஷ்ய ஆளில்லா வானூர்தி ஒன்று மோல்டோவா வான்வெளிக்குள் நுழைந்து வானூர்தி போக்குவரத்தைத் தாமதப்படுத்தியது.

இந்த தாக்குதல் ஸெலென்ஸ்கியின் வானூர்தியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், மோல்டோவா அதனை உறுதிப்படுத்தவில்லை.
 

Leave a Reply