சீனாவில் லைபீரிய நாட்டு கப்பல் தீப்பிடித்து விபத்து - 20 பேர் பலி... ஐவர் மாயம்
கிழக்கு சீனாவில் உள்ள கிங்டாவ் துறைமுகத்தில் பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ‘ஓஷன் மெலடி’ என்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 5 பேரைக் காணவில்லை எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை சுமார் 11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11 மணியளவில் தீப்பற்றிய நிலையில், 2.30 மணிக்கு அணைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 42 பேர் கப்பலில் இருந்தநிலையில், அவர்களில் 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
623 அடி நீளமுள்ள இந்த உலர் சரக்குக் கப்பல், லைபீரியா நாட்டினுடையது என்றும், 20 ஆண்டுகால பழமையான கப்பல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக.31ம் தேதி பழுது பணிக்காக கிங்டாங் துறைமுகம் வந்த கப்பல், அப்போதிலிருந்து கப்பல் கட்டும் தளத்திலேயே இருந்துள்ளது.
இந்தக் கப்பல் கட்டும் தளம், அரசுக்குச் சொந்தமான சீனா ஸ்டேட் ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.






















