வாலை விட்டுவிட்டு...
உலகின் பெரும்பாலான நாடுகளில் அண்மைக் காலமாக வலதுசாரிகளின் எழுச்சி பெரிதும் அவதானிக்கப்பட்டு வருகிறது. முதலாளித்துவத்தின் ஒரு அங்கமான வலதுசாரிக் கொள்கைகள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அந்தக் கருத்தியல் பல அம்சங்களில் மனித குலத்துக்கு விரோதமான விடயங்களைக் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவதானிக்கப்பட்ட இடதுசாரிகளின் உலகளாவிய எழுச்சி, 1990களில் நிகழ்ந்த சோவியத் ஒன்றியத்தின் சிதைவின் பின்னர் வரவேற்பற்றுப் போயுள்ளதையும் காணலாம்.
ஜனநாயக நடைமுறையில் மக்களின் வாக்குகள் மூலமாகவே அரசாங்கங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. கவர்ச்சிகரமான பிரசாரங்கள், தேர்தல் வாக்குறுதிகள், பிரபல்யம்மிக்க வேட்பாளர்கள் உள்ளிட்ட பல விடயங்களைக் கவனத்தில் எடுத்து வாக்களிக்கும் வெகுமக்கள், தாம் வாக்களிக்கும் கட்சிகளின் உண்மையான கொள்கைகளையும், அந்தக் கட்சித் தலைவர்களின் நோக்கங்களையும் தெளிவாக அறிந்து வாக்களிக்கத் தவறுகிறார்கள் என்பதை பல்வேறு நாடுகளின் தேர்தல்களிலும் அவதானிக்க முடிகின்றது.
தேர்தல்களில் போட்டியிடும் ஒன்றுக்கு ஒன்று எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட, கொள்கை வேறுபாடு கொண்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பரப்புரையின் போது போட்டிக் கட்சிகள் தொடர்பில் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும், விளக்கங்களை அளித்தாலும் வெகுமக்கள் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை என்பதையும் பார்க்க முடிகின்றது. சில கட்சிகள் வாலை விட்டுவிட்டு தும்பைப் பிடித்த கதை போல விமர்சனங்களை முன்வைப்பதையும் பார்க்க முடிகின்றது. அத்தகைய ஒரு விடயம் யேர்மனியில் அண்மையில் நடைபெற்றுள்ளது.
வலதுசாரிக் கொள்கை கொண்ட ஒரு கட்சியின் மாபெரும் எழுச்சி உலகளாவிய அடிப்படையில் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே எத்தகைய பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக ஹிட்லர் தலைமையிலான யேர்மனியே இருக்க முடியும். அத்தகைய ஹிட்லர் ஆட்சி செய்த யேர்மனியில் அண்மைக் காலமாக மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றுவரும் 'யேர்மனிக்கான மாற்று' என்ற கட்சியின் மாநாடு அண்மையில் நடைபெற்றதைத் தொடர்ந்து, அந்தக் கட்சி மீது ஏனைய கட்சிகள் பலத்த விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.
யேர்மனிக்கான மற்றுக் கட்சியின் மாநாடு யூலை நான்காம் திகதி யேர்மனியின் Erfurt என்ற இடத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெற்ற இடமும், நிர்ணயிக்கப்பட்ட தேதியும் யேர்மனியின் கடந்தகால வரலாறோடு தொடர்புபட்டதாக உள்ளது. ஹிட்லர் தலைமையிலான நாஸிக் கட்சியின் முன்னோடியான 'முதலாவது ரைஹ் கட்சி'யின் மாநாடு 1926ஆம் ஆண்டு யூலை மாதம் 3ஆம், 4ஆம் திகதிகளில் அருகே உள்ள வைமர் என்ற இடத்திலேயே நடைபெற்றிருந்தது. கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கு நிர்ணயித்த திகதியும், தேர்வுசெய்த இடமும் வரலாற்றை நினைவுபடுத்த யேர்மனிக்கான மாற்றுக் கட்சி தெரிவு செய்த ஒரு உத்தி எனக் கருதாமல் இருக்க முடியாது.
தான் யார் என்பதைக் குறித்துக் காட்ட கட்சி ஏற்பாடு செய்த இந்த மாநாடு இடதுசாரிகளின் பலத்த எதிர்ப்பையும், ஏனைய கட்சிகளின் கண்டனத்தையும் எதிர்கொண்டு இருந்தது. மாநாடு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த பல இடதுசாரித் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. அத்தோடு வீதித்தடைகளை ஏற்படுத்தி கட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டு மண்டபத்தை அடைவதைத் தடுத்து விடவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முனைந்தனர். எனினும் அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மாநாட்டுப் பிரதிநிதிகளை முதல்நாள் இரவே அழைத்துச் சென்று மாநாடு குழப்பமின்றி நடைபெற வழிசெய்தனர்.
2013ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட யேர்மனிக்கான மாற்றுக் கட்சி யேர்மனியில் தற்போது உள்ள அதிதீவிர வலதுசாரிக் கட்சியாக அறியப்படுகிறது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 20 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்ற இந்தக் கட்சி 630 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. எனினும் இந்தக் கட்சியோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. அந்தக் கட்சியின் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என ஏனைய கட்சிகள் வெளிப்படையாகத் தெரிவித்த போதிலும், அந்தக் கட்சியின் ஒரேயொரு கொள்கையைத் தவிர ஏனைய கட்சிகள் யாவும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருந்து வருவதைப் பார்க்க முடிகின்றது.
உக்ரைன் விவகாரம் உள்நாட்டுப் போராக மாறி, பின்னர் உக்ரைனுக்கு எதிரான ரஸ்யாவின் படையெடுப்பாகி, தற்போது நான்கு ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்தும் நீடித்துவரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ரஸ்யாவுக்கு எதிரான அணிதிரட்டல் நடைபெற்று வருவது நாம் அறிந்ததே. உக்ரைனுக்கு மறைமுகமாக பொருளாதார மற்றும் படைத்துறை உதவிகளை வழங்கிவரும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும், குறிப்பாக நேட்டோ கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாடுகளும் ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மனமின்றி உள்ளன. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் சக்திகளை 'ரஸ்யாவின் கைக்கூலிகள்' எனவும் வர்ணித்து வருகின்றன. அத்தகைய ஒரு வசைபாடலுக்கு யேர்மனிக்கான மாற்று கட்சியும் ஆளாகி உள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாயின் ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் இந்தக் கட்சி, யேர்மனி இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு ரஸ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு என்பவை மலிவான விலையில் கிடைத்தமை தடைப்பட்டதே காரணம் என்கிறது. அது மாத்திரமன்றி, யேர்மனிக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கும் மார்க்கமாக விளங்கிய கடலடிக் குழாய் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட விவகாரத்தில் உக்ரைன் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டும் இந்தக் கட்சி உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தை யேர்மனி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது.
ஐரோப்பாவின் பொதுவான நிலைப்பாட்டுக்கு முரணாக யேர்மனிக்கான மாற்றுக் கட்சி தொடர்ச்சியாகப் பேசிவரும் நிலையில் அந்தக் கட்சி ரஸ்யாவிடம் இருந்து பணம் பெற்றுள்ளதாக ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை அந்தக் கட்சி முற்றாக மறுத்துள்ளது.
யேர்மனியின் தற்போதைய அரசுத் தலைவராக உள்ள பிரடெரிக் மெயற்ஸ் கடந்த முப்பது ஆண்டுகளில் மக்களின் செல்வாக்கை அதிகம் இழந்த தலைவராக உள்ளார். அதேவேளை, நாட்டில் உள்ள ஏனைய கட்சிகளின் எதிர்ப்புப் பிரசாரங்களின் மத்தியிலும் யேர்மனிக்கான மாற்றுக் கட்சியின் செல்வாக்கு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. குறுகிய காலத்திலேயே ஒருசில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள அந்தக் கட்சி அடுத்து வரவிருக்கும் ஒருசில மாநிலத் தேர்தல்களிலும் அதிக செல்வாக்கைக் கொண்டிருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்தத் தகவல் ஏனைய கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
யேர்மனிக்கான மாற்றுக் கட்சி அதிதீவிர வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டுள்ளதால் அதனைத் தடை செய்ய வேண்டும் என அரசாங்கமே நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், அரசின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இணையத்தள விவரங்களை கட்சி என்ற அடிப்படையில் யேர்மனிக்கான மாற்றுக் கட்சியுடன் பகிரப் போவதில்லை என யேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்புச் செய்துள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் பெரிதும் கவனத்தைப் பெற்றுள்ளது. 'ரஸ்யாவுடன் நெருக்கமான உறவை யேர்மனிக்கான மாற்றுக் கட்சி கொண்டுள்ள நிலையில், முக்கியமான தகவல்களை ரஸ்யாவுக்கு வழங்க வாய்ப்பு இருக்கிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம்' என்பது அவரது வாதம்.
தீவிர வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டுள்ள ஒரு கட்சி யேர்மனி போன்ற ஒரு நாட்டில் மாத்திரமன்றி எந்தவொரு நாட்டில் எழுச்சி பெற்றாலும் அதற்கு எதிராகக் குரல் தர வேண்டியது, முடிந்தால் அந்த எழுச்சியைக் கட்டுப்படுத்த அல்லது தடுத்துவிட முயல வேண்டியது ஜனநாயக மற்றும் முற்போக்குச் சக்திகளின் தலையாய கடமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், கட்சியின் நிலைப்பாடு மனித குலத்துக்குத் தீங்கு என்ற அடிப்படையில் அதனை நோக்குவதை விடுத்து வெறும் ரஸ்ய ஆதரவு நிலைப்பாடு ஒன்றையே குற்றச்சாட்டாக வைப்பது, குற்றம் சாட்டும் கட்சிகளின் நேர்மையையும், நோக்கத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.
மறுபுறம், உக்ரைனில் நடைபெற்றுவரும் போரின் விளைவால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்கள் தங்கள் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வை முன்மொழியும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, யேர்மனிக்கான மாற்றுக் கட்சியின் அதிதீவிர வலதுசாரிக் கொள்கைகளை எதிர்ப்பதை விடுத்து அந்தக் கட்சி ரஸ்ய சார்புக் கட்சி எனக் குற்றம் சாட்டுவதால் மாத்திரம் அந்தக் கட்சியின் மக்கள் ஆதரவுத் தளத்தைச் சிதைத்துவிட முடியாது என்பதை ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலையே தொடருமாயின், யேர்மனிக்கான மாற்றுக் கட்சிக்கான மக்கள் ஆதரவு எதிர்காலத்திலும் அதிகரிக்கும் வாய்ப்பே உள்ளது.
சுவிசிலிருந்து சண் தவராஜா





















