ட்ரம்பின் செல்வாக்கில் பெரும் சரிவு - அதிர்ச்சியூட்டும் கருத்துக்கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு அவரது தற்போதைய பதவிக்காலத்தில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீதான போர் மற்றும் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கையாளும் விதம் குறித்து அமெரிக்க மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ரொய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) நடத்திய புதிய கருத்துக்கணிப்பின், டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகளுக்கு 34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது கடந்த கருத்துக்கணிப்பில் இருந்த 36 சதவீதத்தை விட குறைவாகும். 2025 ஜனவரியில் அவர் பதவியேற்ற போது 47 சதவீதமாக இருந்த அவரது செல்வாக்கு, தற்போது படிப்படியாகச் சரிந்து வருகிறது.
பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போரைத் தொடங்கியதில் இருந்தே ட்ரம்பின் செல்வாக்கு பெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. இந்த போரின் விளைவாக அமெரிக்காவில் பெற்றோல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளமை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதியின் செயற்பாட்டை 22 சதவீதத்தினர் மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இது முன்னதாக இருந்த 25 சதவீதத்திலிருந்து மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.























