கொலம்பியாவில் குண்டு வெடிப்பு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
கொலம்பியாவின் காஜிபியோ பகுதியில் நேற்று (26) பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 36 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கொலம்பிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சுமார் 200 கன மீட்டர் பரப்பளவிற்கு ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது.
இது குண்டுவெடிப்பின் அதிபயங்கர தீவிரத்தை வெளிப்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் கொலொம்பியாவின் பிரபல கடத்தல்காரரான ஐவன் மோர்டிஸ்கோவின் திட்டமிடல் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என அந்த நாட்டு அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், மேலதிக தாக்குதல்களைத் தடுக்க அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் செயற்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






















