தாயை கொடூரமாக கொன்ற மகனை விடுவித்த நீதிமன்றம் - ஏன் தெரியுமா
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் பகுதியில், தனது 71 வயது தாயைக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால், அவர் மீது குற்றவியல் ரீதியாகப் பொறுப்பில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரின்ஸ்டன் அவென்யூவிலுள்ள வீட்டில் தனது தாய் புளோரா சாங்கை அடித்துக் கொன்றதாக ஆல்வின் இயூ-குவாங் லீ மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
2008 ஆம் ஆண்டு முதல் ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) நோயினால் பாதிக்கப்பட்டிருந்த லீ, 2022 இல் தனது மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தியதால் தீவிர மனப்பிறழ்வுக்கு (Psychosis) உள்ளாகியிருந்ததாகவும், அதன் விளைவாகவே இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் வாக்கர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவத்தன்று வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பொலிஸார், சுவர்கள் மற்றும் தரைகளில் இரத்தக் கறைகள் படிந்திருப்பதையும், நடைபாதையில் தளபாடங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் கண்டனர்.
பொலிஸார் ஒரு படுக்கையறை கதவை உடைத்து உள்ளே சென்றபோது, லீ அங்குள்ள கணினி மேசையில் அமர்ந்திருந்ததோடு, பொலிஸாரைக் கண்டு எந்தப் பதற்றமும் அடையாமல் கைகளை உயர்த்தியபடி சரணடைந்துள்ளார்.
பின்னர், அங்கு குவிக்கப்பட்டிருந்த தளபாடங்களுக்கு அடியில் இருந்து அவரது தாயின் உடல் மீட்கப்பட்டது.
உடற்கூறு ஆய்வில், அவர் பலத்த காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
லீ தனது தாயைத் தாக்கும் போது அது தவறான செயல் என்பதை உணரும் நிலையில் இருக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அவரை மேலதிக சிகிச்சைக்காக கோக்விட்லாமில் உள்ள தடயவியல் மனநல மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.






















