நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 29 இற்கு மாற்றம்
இலங்கை
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபரனா சுவந்துருகொட முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















