இல்லறத்துப் பெண்ணுக்கும் கள்ளம் புரியாது ; கபடம் தெரியாது
சினிமா
" யாரிவன் , எங்கிருந்து வந்தான் , என்ன இவன் பழைய கதை என்றெல்லாம் குழம்பும் உன் மனசாட்சி . தெள்ளிய நீருக்கும் , இல்லறத்துப் பெண்ணுக்கும் கள்ளம் புரியாது ; கபடம் தெரியாது .
கண்ணாடி உன்மனம் , அதிலே நீ காண்பது உன் கணவனின் முகம் .
அரண்மனை , அதிகாரம் ஆள் , அம்பு , சேனை இதுதான் நீ காணும்
உலகம் . இன்னொரு உலகம் உண்டு , நான் கண்டது , நீ காணாதது .
காடு சுற்றுவார்கள் , கலப்பை பிடிப்பார்கள் , உழுவார்கள் , விதைப்பார்கள் , அறுப்பார்கள் சுமப்பார்கள் ; ஆனால் உண்ண மட்டும்
உணவின்றித் தவிப்பார்கள் . அத்தகைய மாபெரும் கூட்டத்திலே நானும் ஒருவன் .
படையிலே சேர்ந்தேன் , மக்களுக்குப் பணி புரிய , நாட்டைக்
காக்க . சேர்ந்த பின்பே அறிந்தேன் , ஆற்ற வேண்டிய படை மக்களை அழ வைத்தது ; வாழ வைக்க வேண்டிய படை மக்களை மாள வைத்தது என்று . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் ,வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் . அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி , அணைக்கத் தாவும் என் மன சாட்சி .
ஏன் இப்படி ? எதற்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . கடைசியில் ஒரே ஒரு முடிவுக்கு
வந்தேன் . மக்களின் மதிப்பைப் பெற்ற ஒருவன் நாட்டில் தலைவன் ஆகும் வரை , உங்கள் சர்வாதிகார ஆட்சிக்கு எல்லையே இல்லை என்று உணர்ந்து , புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன் .
புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல . அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு , கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை , குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருட்களை . கத்தி எடுக்காத ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது .
பிடிபட்டேன் ஒருநாள் , சிறையில் வதை பட்டேன் . பாராளும் மன்னனாகப் பார்க்கிறாயே இப்போது , அவன் சிறையிலே சிறையிலே
இருந்தபோது , பாராளுவோர் தந்த பரிசுகள் , சவுக்கடி , சூடு !
செல்வந்தன் வீட்டு மாட்டுக்கும் வைத்திய வசதி உண்டு , ஏழை அதனினிலும் இழிந்தவனா உங்கள் நாட்டிலே ? என்று கேட்டதற்காகவா இந்த தண்டனை ? "
வசனம் : கவியரசு கண்ணதாசன் .
திரைப்படம் - நாடோடி மன்னன்.























