சுவாமிகளின் மறைவு நல்லை ஆதீனத்தில் இடை வெளியினை ஏற்படுத்தியுள்ளது - முதலாவது குருபூசை வைபத்தில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு!
இலங்கை
நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான இன்றைய தினம் (22.04.2026) சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் தலைமையில் நல்லை ஆதீனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக மறைந்த குரு மகா சந்நிதானத்தின் திருவுருவச் சிலை கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் குரு மகா சந்நிதானத்தின் நினைவைப் போற்றும் வகையிலான 'சிறப்பு மலர்' உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திவேல்நம்பி, வலம்புரி நாளிதழ் பிரதம ஆசிரியர் திரு. ந. விஜயசுந்தரம் உள்ளிட்டவர்களால் சிறப்புரைகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்,
தமிழும் சைவமும் தழைத்தோங்குகின்ற நல்லூர் பிரதேசத்தினுடைய அடையாளமாக நல்லை ஆதீனமும் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு மாற்று கருத்துக்கு இடமில்லை எனவும், யாழ் மாவட்ட செயலக நிகழ்வுகளில் சமயத் தலைவராக மறைந்த ஆதீன சுவாமி அவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும் வழங்குவதுடன் மாவட்டத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் கூறுபவராகவும் விளங்கியவர் எனத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆன்மீகம் சார்ந்து பிரதேசத்தை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லலாம் என்ற பல்வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துபவராகவும் விளங்கியவர் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், சுவாமிகளின் மறைவு இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவருடைய வெற்றிடம் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் அவ் இடைவெளியினை நிரப்ப வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருப்பதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பெருமைகள்மற்றும் மரபுகள் நிலைத்து நிற்க மாவட்டச் செயலகம் அதற்கு துணையாக நிற்கும் எனவும் தெரிவித்தார். மேலும், இந் நிகழ்வில் சமயப் பெரியோர்கள், கல்விமான்கள் மற்றும் பெருமளவான அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.






















