ராமாயணம் குறித்து கருத்து: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ்ராஜ்...
சினிமா
கேரளா இலக்கிய விழாவில் நடந்த கலந்துரையாடலின் போது நடிகர் பிரகாஷ்ராஜ் ராமாயணம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அதில் ராமாயண கதாபாத்திரங்கள் நவீன கால உரையாடல்களை மேற்கொள்வது போல ஒரு கற்பனையான கதையை கூறினார். சீதையை தேடி செல்லும் பயணத்தின் போது தான் சாப்பிட்ட பழங்களுக்கு ராமன் பணம் செலுத்துவதாக அவரது கருத்து அமைந்து இருந்தது.
அவர் பேசிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் பானுபிரகாஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில், ‘பிரகாஷ்ராஜின் பேச்சு இந்து சமூகத்தின் மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் பிரகாஷ் ராஜ் திட்டமிட்டே மதக்கருத்துக்களை திரித்து கூறி சர்ச்சையை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறி உள்ளார்.
ஏற்கனவே இதே விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் மீது வழக்கறிஞர் அமிதா சச்தேவா புகார் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






















