இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா
இலங்கை
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் நேற்று (19) இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும், மலையக தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று, கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளுக்கு எனது மரியாதைக்குரிய வாழ்த்துகளையும் ஆழ்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக ‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அக்காலப்பகுதியில் வழங்கப்பட்ட நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மிகவும் விலைமதிப்பற்றவை.
அத்துடன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அவரது குழுவினர் இக்காலகட்டத்தில் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் துரித செயல்பாடுகளை நான் பாராட்டுகிறேன்.
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மலையகச் சமூகம் மற்றும் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களைப் பாதிக்கும் பல அழுத்தமான சமூக-பொருளாதார மற்றும் மேம்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் இந்தியாவுடனான நீண்டகால உறவுகளால் பிணைக்கப்பட்ட இச்சமூகங்களுக்கு, நிலையான வளர்ச்சி, உள்ளடக்கம் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்த இலக்கு வைக்கப்பட்ட கொள்கை ஆதரவும் மேம்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பும் அவசியமாகும்.
அதன்படி, முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் வருமாறு,
முறையான பூர்வீக ஆவணங்கள் இல்லாத மலையக மக்கள் இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) பெறுவதற்கு ஏதுவாக, ஆவணத் தேவைகளில் தளர்வுகளை ஏற்படுத்தி ஒரு சிறப்பு வசதி பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
தற்போதுள்ள இந்திய நிதியுதவியுடன் கூடிய வீட்டுத்திட்டத்தை 2,00,000 குடும்பங்களுக்கு விரிவுபடுத்தி, அவர்களுக்கு நிரந்தரமான மற்றும் கண்ணியமான வாழ்விடங்களை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தைப் போன்று, லங்கா எல்.ஐ.சி ஊடாக 5 இலட்சம் மலையக மக்களுக்கு மலிவு விலை சுகாதாரக் காப்பீட்டை அறிமுகப்படுத்த வேண்டும்.
தோட்டப்பகுதிகளுக்குச் சிறிய ஆம்புலன்ஸ் வசதிகளை வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். மலையக மற்றும் கிராமப்புறங்களில் இந்திய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தகவல் தொழில்நுட்ப (IT) பயிற்சி மையங்களை நிறுவ வேண்டும்.
மலையகத்தில் இந்திய ஆதரவுடன் ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குதல், மருந்தாக்கத் துறை ஒத்துழைப்பு மூலம் குறைந்த விலையில் மருந்துகளை உற்பத்தி செய்தல் மற்றும் நவீன குளிர் சேமிப்பு வசதிகளை நாடு முழுவதும் ஏற்படுத்துதல்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மீனவ சமூகங்களுக்கு நவீன மீன்பிடித் தொழில்நுட்பங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கக் கூட்டுத் திட்டங்களை முன்னெடுத்தல்.
இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது அவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்புவோருக்கு விரிவான மீள் குடியேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்குத் திரும்பி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தற்காலிக குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் மற்றும் நில உரிமைகளை வழங்க வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், ஏற்கனவே புதுடில்லியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த 12 அம்சக் கோரிக்கைகளும் விரைவில் பரிசீலிக்கப்படும் என மலையக சமூகத்தினர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.






















