சீன தொழிலதிபருடன் ரகசிய சந்திப்பு- பெரு அதிபர் ஜோஸ் ஜெரி பதவி நீக்கம்
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி அடுத்தடுத்து அதிபர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் 7-வது அதிபராக கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற ஜோஸ் ஜெரி (வயது 39), தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். சீன தொழிலதிபர் ஜிகுவா யாங் என்பவரை, அதிபர் ஜோஸ் ஜெரி ரகசியமாகச் சந்தித்த வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இச்சந்திப்பின் போது முகமூடி அணிந்து கொண்டு அவர் ரகசியமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், அவருக்கு எதிராக 75 வாக்குகள் விழுந்ததை அடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். வெறும் 4 மாதங்களே பதவியில் இருந்த ஜோஸ் ஜெரி, தனது தவறுக்கு மன்னிப்பு கோரிய போதிலும் நாடாளுமன்றம் அதனை ஏற்கவில்லை. தற்போது புதிய இடைக்கால அதிபராக ஓய்வுபெற்ற நீதிபதி ஜோஸ் மரியா பால்காசர் (83) நியமிக்கப்பட்டுள்ளார்.






















