சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
இலங்கை
சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்ற கும்பலை கைது செய்ய முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (25) அதிகாலை 2.35 மணியளவில் நால்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நால்ல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்கள் முச்சக்கரவண்டி ஒன்றில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலஹேன கிராமத்திற்குள் நுழையும் வீதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றைப் பரிசோதித்துள்ளனர்.
அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, அந்த லொறியில் மாடுகளை ஏற்றிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, லொறியில் இருந்த நபர் ஒருவர் அவர்களைத் தாக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமை நேரத் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
இடது கையில் காயமடைந்த அவர், மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லொறியில் இருந்த ஏனைய நான்கு சந்தேக நபர்களும் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.























