கனடாவில் உறைமழை, பனிப்பொழிவு மின் தடை குறித்து எச்சரிக்கை
கனடா
கனடாவின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கிழக்கு பகுதிகளில் உள்ள ஒன்டாரியோ, கியூபெக் மற்றும் அட்லான்டிக் மாகாணங்களில் உறைமழை, பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று ஆகியவை கலந்த கடுமையான வானிலை நிலவுகிறது.
இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்கள வானிலை நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உறைமழையுடன் கூடிய பலத்த காற்று இணைந்து மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்குவதாக வானிலை நிபுணர் ஜெரால்ட் செங் தெரிவித்தார்.
டொராண்டோ பெரும்பாகப் பகுதி, மான்ட்ரியால் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைகக்ளம் எதிர்வுகூறியுள்ளது.
அதேபோல் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடார் மாகாணத்தின் பே ஸ்ட். ஜார்ஜ், கார்னர் ப்ரூக் போன்ற பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“உறைமழையால் மின் கம்பிகள், மின் தூண்கள் மற்றும் பிற பொருட்களில் பனிக்கட்டிகள் உருவாகுகின்றன.
இதனுடன் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினால், அது மிக மோசமான கலவை எனவும் இது மேலும் பல மின்தடைகளுக்கு வழிவகுக்கும்,” என ஜெரால்ட் செங் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஒன்டாரியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவா ஸ்கோஷியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு ஆகிய மாகாணங்களின் பல பகுதிகளில் உறைமழை தொடர்ந்து பெய்து வருவதுடன், சில இடங்களில் பனிப்பொழிவும் பதிவாகியுள்ளது.






















