வரலாற்றில் மறை(று)க்கப்படும் இனப் படுகொலைகள்
'வெற்றி பெற்றவர்களே வரலாறை எழுதுகிறார்கள்' என்ற பிரபலமான சொலவடை ஒன்று உள்ளது. இந்தக் கூற்று பெரும்பாலும் உண்மையே. தோல்வி கண்ட தரப்பின் வரலாறை எழுத எவரும் எஞ்சியிருப்பதில்லை என்பது ஒருபுறம் இருக்க, தோல்வி கண்டவனின் வரலாறைத் தெரிந்து கொள்ள உலகம் ஆர்வம் காட்டுவதும் இல்லை என்பதுவும் யதார்த்தமான உண்மை. வெற்றி, தோல்வி என்பவை களத்தில் தீர்மானிக்கப்படுகின்றன. இரு நாட்டு மோதலாயினும், உலகப் போர்களாயினும் படையினர் மாத்திரம் சண்டையிடுவதில்லை. அவர்களோடு இணைந்து தொண்டர் படையினரும், துணை இராணுவக் குழுக்களும், பொதுமக்களும் கூடக் களத்தில் போரிடுகின்றனர். போர்களின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பில் உலகளாவிய அடிப்படையிலான சட்டங்கள், மரபுகள் இருந்தாலும் போர்களின் போது அவை யாவும் மதிக்கப்படுகின்றனவா, கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. ஆனால், எழுதப்படும் வரலாறுகளில் இத்தகைய மீறல்கள் குறிப்பிடப்படுவதில்லை என்பதே உண்மை.
இரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகளும், நேச நாடுகளும் போரிட்டன என்பது தெரிந்த விடயம். இந்தப் போரின் போது ஹிட்லரின் நாஸிப் படைகள் மனிதகுலம் அறிந்திராத போர்க் குற்றங்களில் ஈடுபட்டன என்பதுவும் பரகசியம். நாஸிக்கள் ஆக்கிரமித்திருந்த நாடுகளில் நாஸிக்களின் ஏவல் படைகளாக அந்தந்த நாடுகளில் செயற்பட்ட துணை இராணுவக் குழுக்களும், நாஸிக்களுக்கு நிகரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தன. நாஸிக்களின் கொடுமைகள் பேசப்பட்ட அளவுக்கு இத்தகைய துணை இராணுவக் குழுக்களின் கொடூரச் செயல்கள் பேசப்படவில்லை. உலகின் கண்களில் அத்தகைய சம்பவங்கள் தெரியவராத போதிலும், உள்நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவில் நடைபெற்ற சம்பவங்கள், இழைக்கப்பட்ட அநீதிகள் வடுக்களாக என்றென்றும் நினைவில் இருக்கவே செய்கின்றன. ஆண்டுதோறும் அத்தகைய சம்பவங்களை பாதிக்கப்பட்ட மக்கள் நினைவுகூர்ந்தும் வருகின்றனர்.
அத்தகைய படுகொலைகளுள் ஒன்று அண்மையில் வொலின் பிராந்தியத்தில் நினைவு கூரப்பட்டது. உக்ரைன் மற்றும் போலந்தை அண்டிய இந்தப் பிராந்தியத்தில் வாழும் போலிஷ் இன மக்களை இலக்குவைத்து அந்தப் படுகொலைகள் புரியப்பட்டன. உக்ரைன் நாட்டில் சிறுபான்மை இனமாக போலிஷ் மக்கள் வாழ்ந்த பொலினியா, கிழக்கு கலிசியா, பொலேசியா, இன்றைய போலந்து மாகாணமாக உள்ள லப்லின் ஆகிய இடங்களில் வாழ்ந்த போலிஷ் இன மக்கள் மீது உக்ரைனின் 'உக்ரைன் கிளர்ச்சி இராணுவம்' என்ற துணை இராணுவக் குழுவினர் நடத்திய தாக்குதல்களே 'வொலின் படுகொலை' என்ற பெயரில் வரலாற்றில் பதிவாகி உள்ளது.
உக்ரைன் கிளர்ச்சி இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வரலாற்றில் ஒன்றுக்கொன்று முரணான பதிவுகள் உள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது நாஸிப் படைகள் உக்ரனை ஆக்கிரமித்திருந்த காலப் பகுதியில் உக்ரைன் தேசியவாத அமைப்பின் இராணுவப் பிரிவாக உருவாக்கப்பட்டதே உக்ரைன் கிளர்ச்சி இராணுவம். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த உக்ரைன் தேசியவாத அமைப்பு, நாஸிப் படைகளின் ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் நாஸிக்களுடன் கரம்கோர்த்துக் கொண்டது. தங்களுக்கான தனிநாடு உருவாக நாஸிக்கள் உதவுவார்கள் என அவர்கள் நம்பினார்கள். நாஸிக்கள் போரில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னான காலப்பகுதியில் இவர்கள் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். எனினும், 1950ஆம் ஆண்டில் இவர்கள் சோவியத் படைகளால் முற்றாக ஒடுக்கப்பட்டார்கள்.
அயல் நாடான போலந்துடன் நீண்ட காலமாக கசப்புணர்வைக் கொண்டிருந்த உக்ரைன் தேசியவாதிகள் தமது நாட்டின் எல்லையினுள் வசிக்கும் போலிஷ் இனச் சிறுபான்மையினரை தமக்கான அச்சுறுத்தலாகக் கருதி வந்தனர். இந்தப் போலிஷ் மக்களின் நலன்களைப் பேணுவது என்ற போர்வையில் தமது நிலங்களை போலந்து ஆக்கிரமித்துக் கொள்ளக் கூடும் என அவர்கள் பயந்தனர். இதன் விளைவாக போலிஷ் இன மக்கள் மீது படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.
1943ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட படுகொலைகளில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பாரபட்சம் இன்றி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போலிஷ் இன மக்கள் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்கள். படுகொலையில் ஈடுபட்ட உக்ரைன் கிளர்ச்சி இராணுவம் ஆயிரக் கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு இன்றும் உயிர்வாழும் சாட்சியங்கள் உள்ளன. நடைபெற்ற படுகொலைகளைத் தடுக்க முயன்ற, போலிஷ் இன மக்களைக் காப்பாற்ற முயன்ற உக்ரைன் மக்களும் பெருமளவில் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் உள்ளன. யூலை 11ஆம் திகதி இந்தப் படுகொலைகளின் நினைவு அனுட்டிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வின் போது 82 வருடங்களுக்கு முன்னர் அந்த நாளில் நடைபெற்ற கொடூரங்களை இன்றும் உயிர்வாழும் ஒருசிலர் நினைவு கூர்ந்துள்ளனர்.
நடைபெற்ற படுகொலைகளை 'இனப் படுகொலை' என போலந்து குறிப்பிட்டு வருகின்றது. இந்தப் படுகொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். கொன்று புதைக்கப்பட்ட பொதுமக்களின் சிதைவுகள் தோண்டி எடுக்கப்பட்டு, அவை முறையான விதத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும். உறவுகளை இழந்தோருக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என போலந்து கோரிக்கை விடுத்து வருகின்றது. மறுபுறம், யூலை 11ஐ 'வொலின் படுகொலை நினைவு தினம்' என போலந்து நாடாளுமன்றம் இந்த வருடத்தில் பிரகடனம் செய்துள்ளது.
போலந்தின் கோரிக்கைகளை தற்போதைய உக்ரைன் அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனப் படுத்தி வருகின்றது. அதேநேரம் உக்ரைன் கிளர்ச்சி இராணுவத்தின் தலைவர்களை தேசபக்தர்களாகக் கருதி அவர்களுக்கு மதிப்பளிக்கும் நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஸ்ரெபான் பன்டாரா, ரோமன் சுக்கோவிச் ஆகியோர் இன்றைய உக்ரைனில் தேசபக்தர்களாகக் கொண்டாடப்படும் நிலையில் இவர்கள் இனப் படுகொலைகளில் ஈடுபட்டார்கள், நாஸிக்களுடன் இணைந்து யூதர்களைப் படுகொலை செய்தார்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் பெயர்கள் உக்ரைனில் பல சதுக்கங்களுக்கும், வீதிகளுக்கும், முக்கிய இடங்களுக்கும் சூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் கிளர்ச்சி இராணுவத்தின் தலைவர்களை 'நாஸிக்கள்' என வகைப்படுத்தும் ரஸ்யா, அவர்களைக் கொண்டாடும் வகையிலான உக்ரைனின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டித்து வருகின்றது. உக்ரைன் மீதான தனது படையெடுப்புக்கான காரணங்களுள் ஒன்றாக தற்போதைய உக்ரைன் அரசின் நாஸிசக் கொள்கைகளைக் கொண்டாடும் செயற்பாட்டையும் ஒன்றாகக் கூறி வருகின்றது.
நாஸிசக் கொள்கையையும், அதற்கு நேர் எதிரான கம்யூனிசக் கொள்கையையும் ஒரே தட்டில் வைத்து அளவீடு செய்யும் ஒரு முயற்சி மேற்குலகினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. வரலாற்றை மாற்றி எழுதும் இத்தகைய சதியில், சோவியத் ஒன்றியத்தின் பங்காளிகளாக இருந்து, இரண்டாம் உலகப் போரின் போது நாஸிப் படைகளுக்கு எதிராக செம்படையினருடன் இணைந்து போரிட்ட நாடுகளின் அரசாங்கங்களும் கூடக் கரங் கோர்த்து உள்ளதையும் பார்க்க முடிகின்றது.
இத்தகைய ஒப்பீடுகளை முன்வைக்கும் சக்திகள் உக்ரைன் கிளர்ச்சி இராணுவம் நிகழ்த்திய வொலின் படுகொலை உள்ளிட்ட மனிதகுல விரோதச் சம்பவங்களை நியாயப்படுத்திவிட அல்லது சிறிய சம்பவங்களாகக் குறுக்கிவிட தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றன.
அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கங்களின் இத்தகைய முயற்சிகள் அரசியல் அரங்கில் அவர்களுக்குச் சாதகமான விளைவுகளைச் சிலவேளை பெற்றுத் தரக் கூடும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவை நீதி கிடைக்கும் வரையான போராட்டங்களாகவே நீடிக்கும் என்பதே உண்மை.
வொலின் படுகொலை போன்ற உலகின் கண்களில் மறைக்கப்பட்ட படுகொலைகள் வரலாறு முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. மனித குல வரலாறு தொடர்பில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் நினைவு கூரவேண்டிய சம்பவங்களாக அவை உள்ளன. வரலாற்றை மறைத்துவிட எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் அம்பலப்படுத்தப்பட வேண்டியவை. இலங்கை முதல் உலகம் பூராவும் உள்ள அத்தகைய சம்பவங்கள் நினைவு கூரப்பட வேண்டியவை மட்டுமன்றி நீதி கோரப்பட வேண்டியவையுமாகும்.
சுவிசிலிருந்து சண் தவராஜா





















