• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குழந்தையின் பொம்மையின் மூலம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது

இலங்கை

பொம்மை ஒன்றின்மூலம் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் அவரது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவ ராஜபக்ஷபுர பகுதியில் இன்று (26) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

குறித்த பகுதியில் உள்ள விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு அறையில் இருந்து பெண்ணொருவர் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பொம்மையை எடுத்துச் சென்ற நிலையில் , சந்தேகத்தின் அடிப்படையில் பொம்மையை பரிசோதித்ததில், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் ஒரு மின்னணு தராசு ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மேலும் சோதனையின்போது, குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல சிறிய ஐஸ் பைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது 8 வயது குழந்தைக்கு பொம்மையைக் கொடுத்து, குழந்தையுடன் கொட்டாஞ்சேனையில் இருந்து சீதுவ பகுதிக்கு போதைப்பொருட்களைக் கொண்டு வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

சீதுவ பகுதியில் போதைப்பொருட்கள் பொதி செய்யப்பட்டு, மீண்டும் கொட்டாஞ்சேனை பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply