400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருடன் வெளிநாட்டவர் கைது
இலங்கை
400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா நாட்டைச் சேர்ந்த 52 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த இவர், விமான நிலையத்தில் உள்ள ‘கிரீன் சேனல்’ வழியாக வெளியேற முயன்றபோது சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டார்.
இதன்போது, அவரிடமிருந்து 5 கிலோவிற்கும் அதிகமான கொக்கெய்ன், 12 கிலோவிற்கும் அதிகமான ஹாஷிஷ் போதைப்பொருள் என்பன சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பயணி கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.






















