• Welcome to TamilsGuide
செய்திகள் 1

53 ஆண்டு பழமையான விவசாய நிலம் அபகரிப்பு-எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

இலங்கை

53 ஆண்டுகளாக பயிர்செய்கை செய்து வரும் விவசாயிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இன்றி நிலங்களைப் பறிப்பதை ஏற்க முடியாது,” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களின் வேண்டுகோளின் பேரில், Citizen Voice வேலைத்திட்டத்தின் கீழ் முத்து நகர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை  நேற்று (22) சந்தித்துக் கலந்துரையாடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1000 குடும்பங்கள், கடந்த 53 ஆண்டுகளாக 800 ஏக்கர் காணியில் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி, பேரிச்சை உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டு வருகின்றன. இப்பகுதியில் விவசாயத்துக்காக தனித்துவமான வாவிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், 2023 முதல் துறைமுக அதிகார சபை இந்த விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து, கட்டுப்பாடுகளை விதித்தது. இதனைத் தொடர்ந்து 2024 ஓகஸ்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, 2025 பெப்ரவரி மாதத்திலிருந்து விவசாயிகளை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விவசாயிகள் பலமுறை காணி உறுதிப்பத்திரம் கோரியிருந்தும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும், தற்போது 200 ஏக்கர் நிலம் இரண்டு சூரிய மின் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு, அதில் சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ”சஜித் பிரேமதாச, “நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை வரவேற்கிறோம். ஆனால், 53 ஆண்டுகளாக பயிர்செய்கை செய்து வரும் விவசாயிகளுக்கு நட்டஈடு அல்லது மாற்று ஏற்பாடுகள் இன்றி நிலங்களைப் பறிப்பதை ஏற்க முடியாது,” எனக்  கண்டனம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் “சோலார் திட்டத்திற்கு 100 ஏக்கர் போதுமானது எனவும், 200 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படுவது தவறு எனவும், பயிர்செய்கைக்கான நிலத்தை திரும்ப வழங்க முடியாவிட்டால், நீர்பாசன வசதிகளுடன் கூடிய மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் எனவும்,  விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும், எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பள்ளி, இரண்டு கோவில்கள் மற்றும் வாவிகளுடன் கூடிய பயிர்செய்கை நிலங்களை அரசாங்கம் அபகரிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், பிரச்சினையை விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply