போதைப்பொருள் தொடர்பான சோதனையில் 1,241 நபர்கள் கைது
இலங்கை
நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவின் பேரிலும், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஒருங்கிணைப்பிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையில் 254,679 மில்லி கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), 112,567 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 3,738,356 மில்லிகிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21,132 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், 7,922 வாகனங்கள் மற்றும் 6,545 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





















