தென்கொரியாவில் கொட்டிய கனமழை - வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி
தென்கொரியாவில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கி, கனமழையின் மத்தியில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர் இறந்தனர். 5 பேர் காணாமல் போயினர். மழை தொடங்கியதிலிருந்து 11 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் 13 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.























