நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இரு குழந்தைகள் உள்ளிட்ட 08பேர் உயிரிழப்பு
இலங்கை
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியின் வலது பக்கத்திற்கு இழுத்துச் சென்று எதிர் திசையில் பயணித்த பேருந்துடன் மோதிய விபத்தில் சாரதியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
நாரம்மல பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்மல-கிரியுல்ல வீதியில் நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
9 மற்றும் 11 மாதங்களேயான இரண்டு குழந்தைகளும் 38 வயதான சாரதியுமே இவ்வாறு உயிரிழந்ததுடன், இவர்கள் திவுல்லெவ, மஹாவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மீமுரே கரபகொல்ல பகுதியில் நேற்று (19) பிற்பகல் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 05பேர் உயிரிழந்துள்ளனர்.
மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான வேன், 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற வேளை குறித்த வேனில் 5 வயது சிறுமி உட்பட 6 பேர் பயணித்துள்ளதுடன் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் காயமடைந்தவர்களை பிரதேச மக்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை விபத்துக்குள்ளான வேனை பெண்ணொருவரே செலுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் விபத்தில் காயமடைந்த சிறுமி உள்ளிட்ட நால்வர் உடும்பர வைத்தியசாலையில் சிகிச்சைகளுகாக அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி மற்றும் தெல்தெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
அத்துடன் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்த 5 வயது சிறுவன் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் குறித்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை விபத்தில் உயிரிழந்துள்ளனர்
மீரிகம வத்தளை ஹெந்தலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.






















