காசாவில் உணவுக்காக உதவி மையம் நோக்கி சென்ற மக்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம் - 25 பேர் பலி
கசாவுக்குள் கடந்த மார்ச் முதல் எந்த உணவு மற்றும் உதவி பொருளும் செல்வதை இஸ்ரேல் தடுத்து வைத்து காசா மக்களை பட்டினி போட்டது. இஸ்ரேலின் இந்த மிருகத்தனத்தை சர்வதேச சமூகம் கண்டித்த நிலையில் பல்வேறு அழுத்தத்துக்கு பின் தற்போது உதவி பொருட்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது.
ஆனால் ஐநா உள்ளிட்ட அமைப்புகளை மட்டுப்படுத்தி இஸ்ரேல் - அமெரிக்கா இணைத்து உதவி மையங்களை நிறுவி வருகிறது. பசியால் துடிக்கும் காசா மக்களை அங்கு வரவழைப்பதன்மூலம் அவர்களை வாழ்விடங்களை விட்டு இஸ்ரேல் வெளியேற்ற முயற்சிக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேலிய ஆதரவு பெற்ற அறக்கட்டளை நடத்தும் உதவி விநியோக மையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரகிங்கி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகத்தின் பதிவுத் துறைத் தலைவர் சஹர் அல்-வஹிதி தெரிவித்தார்.
விடியற்காலையில் ஆயிரக்கணக்கான மக்கள் விநியோக தளத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே சென்றனர். இஸ்ரேலிய இராணுவம் அவர்களை கலைந்து சென்று பின்னர் திரும்பி வருமாறு உத்தரவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் ஒரு மருத்துவமனையின் அதிகாரிகள், குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகவும், 175 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாததால், பெயர் வெளியிட விரும்பாத நிலையில் அவர்கள் பேசியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் முன்னதாகவே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளது.























