தம்பிக்கு அண்ணா எழுதிய கடைசி கடிதத்திலிருந்து
சினிமா
‘‘எந்தப்பணி எனக்கு இனிப்பும், எழுச்சியும் தந்து வந்ததோ, எந்த பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்தேனா, எந்தப்பணி மூலம் என்னை உன் அண்ணனாக உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு பெருமிதத்துடன் இந்த உலகத்துக்கு அறிவித்து வந்தேனோ, எந்தப்பணி வாயிலாக என் கருத்துக்களை அண்ணாஉனக்கு அளித்து, உன் ஒப்புதலைப் பெற்று அந்த கருத்துகளின் வெற்றிக்கான வழியினை காண முடிந்ததோ, எந்தப்பணி மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழி கிடைத்து வந்ததோ, எந்தப்பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அக மகிழ்ச்சி பெற முடிந்ததோ அந்த பணியினை முன்பு போலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்று ஏக்கத்தால் துக்கப்பட்டுச் சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டு கிடக்கிறேன் என்பதனை அறிவாய். ‘சூழ்நிலையின் கைதி’ என்ற சொற்றொடருக்குத்தான், ‘முதலமைச்சர்’ என்ற முத்திரையிட்டு இருக்கின்றனர்.
தம்பி! என் மனதுக்கு இனிமை தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லையே என்ற கவலை ஒருபுறம். அத்துடன் பின்னிப் பிணைந்து கொண்டு, என் பேரப்பெண் இளங்கோவின் மகள் கண்மணி மழழை மொழியில் பாடுகிறாள்: ‘‘நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? என்று.
எனக்கென்னவோ, அந்த பாட்டைக்கேட்கும் போதெல்லாம், என் தம்பி, தங்கைகள் நாட்டின் நல்லோர் அனைவருமே என்னை 'நலந்தானா?' என்று கேட்பது போலவே தோன்றுகிறது. கடந்த ஓராண்டாகவே இந்தக் கேள்வி கிளம்பியபடி இருந்தது. அமெரிக்கா சென்று, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அளவுக்கு உடல் நலம் பாழ்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட கவலையை நான் உதறித் தள்ளும் விதமான அன்பும், கனிவும் நாடு முழுவதிலும் இருந்து கிடைத்தன. அரசியலில் நம்மோடு மாறுபட்டிருப்பவர்களிலே பலரும் கனிவு காட்டக் கண்டேன். மனிதத் தன்மை மடிந்து விடவில்லை என்பதனை உணர்ந்தேன் ! "
-தம்பிக்கு அண்ணா எழுதிய கடைசி கடிதத்திலிருந்து !
























