இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் - அவசமராக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
காஷ்மீர் பகல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், 1 உள்ளூர் குதிரை ஓட்டி உயிர் இழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் துண்டித்து உள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போல பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது
இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது. இந்த பதட்டத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்ல இருக்கிறது. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆக்ரோஷமான இந்தியாவின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே போல இந்தியா தரப்பிலும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க இருக்கிறது.
இது தொடர்பாக ஐ.நா.சபைக்கான கிரேக்கத்தின் நிரந்தர பிரதிநிதியும், மே மாதத்திற்குரிய பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான எவாஞ்சலோஸ் கூறும் போது அனைத்து கோணங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்.
அதே வேளையில் அதிகரித்து வரும் பதற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.























