
வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை! -ஜீவன் தொண்டமான்
இலங்கை
‘வரலாற்றைக் கூறி தான் மக்களிடம் வாக்குக் கேட்கவில்லை எனவும், தனது சொந்த ஊர் என்பதால் தான் தான் வாக்குக் கேட்பதாகவும் தம் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் சேவல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றம் தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்பட, ரொட்சில்ட், தவலந்தன்ன, பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கொத்மலை பிரதேச சபையை அமைக்க போவது சேவல் சின்னம் தான் எனத் தெரிவித்த ஜீவன் தொண்டமான் தான் ஆளும் கட்சி அல்லது எதிர் கட்சியை குறை சொல்லி அரசியல் செய்ய விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கு 92 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்த ஜீவன் கடந்த வருடம் தாம் நுவரெலியா மாவட்டத்திற்கு 580 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாகவும், தாம் ஒதுக்கிய நிதியை விட 5 மடங்கு குறைவாகவே தற்போதைய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் இவ்வாறு இருக்கும் போது அமைச்சியில் இருந்து மக்கள் எந்த விதமான வேலை திட்டங்களும் எதிர்பாக்க முடியாது எனத் தெரிவித்த ஜீவன் , பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் 5000 வீடுகள் கட்டப்படும் என வாக்குறுதி வழங்கினாலும், வரவு செலவுத் திட்டத்தில் 379 வீடுகளே கட்டக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது தம்மிடம் 3 விதமான அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும், அதில் 1 ஆவது மறைந்த தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் மரணத்திற்கு பின்னர் அரசியல் மற்றும் தொழிட்சங்க பிரச்சினைகளைச் சரி செய்ய தங்களுக்கு சில கால அவகாசம் தேவைப்பட்டது எனவும், 2 ஆவது கொரோனா தொற்று எனவும், அதற்கு அடுத்ததாக பொறுளாதார சிக்கல் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் 2023 ஆம் ஆண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்ட போது தன் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதாகவும், இருந்தாலும் கூட மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வீடுத் திட்டம் அமுல் படுத்தப்பட்டதோடு , காணி உரிமைப் பத்திரம் தொடர்பான வேலைதிட்டமும் நடைபெற்றதாகவும், இந்திய அரசாங்கம் ஊடாக 19 ஆசிரியர்களை வரவழைத்து பல ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகவும், குழந்தைகளுக்கு ஏற்ற 1197 சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு இலவச காலை உணவு திட்டம் வழங்கப்பட்டதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் இவை அனைத்தையும் ஒரு வருட காலத்தில் செய்யப்பட்டதாகவும், ஆனால் புதிய அரசாங்கம் வந்து 8 மாத காலம் ஆகியும் கூட வெறும் 4 சட்டங்களே அமுல் படுத்தப்பட்டுள்ளன எனவும் இதை தான் விமர்சிக்கவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொத்மலை பிரதேச சபையை உருவாக்கியது தாம் என்பதால் இந்த முறை கொத்மலை பிரதேசத்தில் நாங்கள் சேவல் சின்னதில் தனித்து கேட்பதாகவும், கொத்மலை பிரதேசத்தை சேவல் சின்னம் இல்லாமல் உருவாக்க முடியாது எனவும் அப்படி இருக்கும் போது இந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.