கீவ் மீதான தாக்குதலுக்கு டொனால்டு டிரம்ப் கண்டனம்
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 3 வருடங்கள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா, தற்போது உக்ரைனுடன் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தற்போது 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா பயங்கர வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
சமீபத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் கீவ் மீதான தாக்குதலை தொடர்ந்து புதினை டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
கீவ் மீதான ரஷியாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது தேவையில்லாதது. மேலும் மிகவும் மோசமான நேரம். புதின், நிறுத்துங்கள்..! வாரத்திற்கு 5 ஆயிரம் வீரர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிக்கலாம்..!
இவ்வாறு டிரம்ப் தனது TRUTH சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.






















