• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசியலுக்கெல்லாம் வந்துவிடாதே. நீ ஒரு உண்மையான கலைஞன்.

அந்த மனிதன் தான் என் தனி மனித வாழ்க்கையிலும் நுழைந்து, என் கலைத் திறமைகளுக்குத் தட்டிக் கொடுத்து, என் சோகங்களுக்குக் கண்ணீர் துடைத்து, என் இடறல்களுக்குத் தோள் கொடுத்து, என்னால் என்றுமே மறக்க முடியாத என் இரண்டாவது தாயாகிப் போனார் …

அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்துவிட்டு அந்த மனிதர் என்னைக் கட்டித் தழுவி பாராட்டிய போதும், வேதம் புதிது படத்திற்கு டெல்லி அதிகாரிகள் அனுமதி மறுத்த போது ஆறுதுல் கூறி உடனே அனுமதி வாங்கித் தந்த போதும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளின் மீது இறக்கி வைக்க முடியவில்லை.

அரசியலுக்கெல்லாம் வந்துவிடாதே. நீ ஒரு உண்மையான கலைஞன். உனது கலைக்கு நீ உண்மையாக இரு. அது போதும் … என்று தான் அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார்.

ஒரு முறை உடல் நிலை சரியில்லாத சூழலில் ஓய்வெடுப்பதற்காக அவர் ஊட்டிக்கு வந்திருந்தார். ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பிற்காக நானும் அங்கு சென்றிருந்தேன்.

அவர் தமிழ்நாடு ஹவுசில் தங்கியிருக்கிறார் என்றுகேள்விப்பட்டதும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன இங்கே? என்று கேட்டார்.

ஷுட்டிங்கிற்காக வந்தேன். நீங்க வந்திருக்கீங்க என்று சொன்னாங்க அதான் என்றேன் நான். ஷுட்டிங்கிற்கா … நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே …

நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான். யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,

மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் … என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.

கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை… நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்

ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.

மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ … அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு… நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்.

மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.

ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.

கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார். இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன். அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார்.

அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.

வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.

மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….

புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.

புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.

ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா..

Leave a Reply