
நேபாளில் சீன நிறுவனம் கட்டிய சர்வதேச விமான நிலைய கட்டுமானத்தில் ரூ.1,400 கோடி ஊழல் - பாராளுமன்ற குழு
நேபாள் நாட்டில் சீன நிறுவனத்தால் கட்டப்பட்ட போக்ரா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்தில் சுமார் நேபாள ரூ.1400 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளதாக நேபாள பாராளுமன்றக் குழு கண்டுபிடித்துள்ளது.
போக்ரா சர்வதேச விமான நிலையம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து வாங்கிய சுமார் ரூ.2,2 கோடி கடன் வாங்கி கட்டப்பட்டது. டிசம்பர் 29, 2022 அன்று சீன நிறுவனத்தால் இந்த விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி, விமான நிலைய கட்டுமானம் முடிந்த பிறகு ஏழு ஆண்டுகளுக்கு 2 சதவீத வட்டி விகிதத்தில் கடனை நேபாளம் திருப்பிச் செலுத்த வேண்டும். பின்னர் அடுத்த 13 ஆண்டுகளில் அசல் தொகையை செலுத்தி முடிக்க வேண்டும்.
நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான செலவை 14.5 கோடி அமெரிக்க டாலர்களாக மதிப்பிட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டு, சீன நிறுவனத்துடன் 21.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் விமான நிலையம் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று பாராளுமன்ற குழு அறிக்கை கூறுகிறது.
மேலும் அந்த அறிக்கையில், திட்டத்தின் கட்டுமானத்தின் போது நடந்த முறைகேடுகளில் ரூ.2.22 பில்லியன் வரி விலக்கு அளித்தல் மற்றும் சின் தண்டா மலையின் 40 மீட்டர் பகுதியை அகற்றுவதற்கு ரூ.320 மில்லியன் செலவு ஆகியவை அடங்கும். ஆனால் அவை ஒருபோதும் செய்யப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் அவ்வறிக்கையில் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.
போக்ரா சர்வதேச விமான நிலையத் திட்டத்தின் தலைவர் பினேஷ் முனகர்மி, நிர்வாகத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பவுடெல், CAAN இயக்குநர் மற்றும் பொறியாளர் பாபுராம் பவுடெல் உள்ளிட்டோரை விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.