
பிராமணர்கள் பற்றி சர்ச்சை கருத்தால் வந்த மிரட்டல் - அனுராக் காஷ்யப் மன்னிப்பு
சினிமா
அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடிப்பில் உருவாகி வரும் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் புலே. மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரைச் சுற்றி உருவாகும் இந்தப் படம் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.
ஆனால் திரையரங்குகளில் வெளியாகும் முன் பல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் ( CBFC ) கேட்டுக் கொண்டுள்ளது. சாதி தொடர்பான வாசகங்களை சென்சார் போர்டு நீக்கக் கோரியதால் படம் வெளியாவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இதை கண்டித்து இன்ஸ்டாகிராமில் பேசியிருந்தார்.
பதிவு
அதில், இந்தியாவில் சாதிகளே இல்லை என்றால் புலே தம்பதியினர் எதற்கு போராடினார்கள்?. இந்த படத்தால் பிராமணர்கள் வெட்கப்படுகிறார்கள். சாதிய, மதவாத அரசினால் இதுபோல் இன்னும் எத்தனை படங்கள் முடக்கப்பட்டுள்ளனவோ?. இந்தப் படங்கள் அவர்களை அப்படி என்னச் செய்கிறது என திறந்த மனதுடனும் வெளியே பேசமாட்டார்கள். மிகவும் கோழைத்தனமானவர்கள். தடாக் 2 படத்தின் திரையிடலின்போது தணிக்கை வாரியம் எங்களிடம் மோடி சாதிகளை ஒழித்துவிட்டார் என்று கூறினார்கள். அதே நேரத்தில் சந்தோஷ் திரைப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை.
தற்போது, பிராமணர்கள் புலே படத்தை எதிர்க்கிறார்கள். சாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவீர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்?. மோடியின் கூற்றுப்படி இந்தியாவில் சாதியப் பாகுபாடு இல்லை என்பதால் உங்கள் பிராமண சமூகம் இங்கே இல்லை. அல்லது எல்லோரும் சேர்ந்து எல்லோரையும் முட்டாளாக்குகிறார்கள் " என்று பதிவிட்டிருந்தார்.
கமெண்ட்
அவரின் இந்த பதிவுக்கு நிறைய கமெண்ட்கள் வந்தன. அதில் ஒரு பயனர், "பிராமணர்கள் உங்கள் தந்தைமார்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அவர்களை எதிர்கிறீர்களோ, அதை விட அதிகமாக அவர்கள் உங்களை எரித்து விடுவார்கள்" என்று கமெண்ட் செய்தார்.
இதற்கு பதில் அளித்த அனுராக் காஷ்யப், "பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன், என்ன செய்வீர்கள்?" என்று காட்டமாக பதில் அளித்தார். இந்த கருத்து சர்ச்சையான நிலையில், பிராமண சமூகத்தினரை புண்படுத்தியதாக அனுராக் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கருத்துக்களால் தனது மகள் மற்றும் குடும்பத்தினருக்கு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல் அழைப்புகள் வருவதாக குறிப்பிட்டு அனுராக் காஷ்யப் தனது காமென்டுக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது எனது மன்னிப்பு கூறல். எனது பதிவுக்காக அல்ல. நான் சொன்ன அந்த ஒரு வரிக்காக மட்டும். அது தவறான விதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு வெறுப்பு வளர்க்கப்படுகிறது.
உங்கள் மகள், குடும்பம், நண்பர்கள் ஆகியோர் சன்ஸ்காரின் (சம்ஸ்காரங்களின்) ராஜாக்களிடம் இருந்து பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல்களை பெறும் அளவுக்கு எந்த ஒரு செயலும் தகுதியானது அல்ல. நான் சொன்னதை நான் திரும்பப் பெற மாட்டேன்.
நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னைத் திட்டுங்கள். என் குடும்பத்தினர் எதுவும் சொல்லவில்லை. மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், இதோ. பிராமணர்களே, பெண்களை விட்டுவிடுங்கள். மனுதர்மத்தை தவிர, பெண்களை மதிக்க வேண்டும் என்பது நமது மற்ற வேதங்களில் கூறப்பட்டுள்ளன. நீங்கள் எந்த பிராமணர் என்பதை முடிவு செய்யுங்கள். இதோ என்னிடமிருந்து மன்னிப்பு," என்று அவர் தெரிவித்துள்ளார்.