
அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தம் - ரஷியாவின் ஆதரவை கேட்கும் ஈரான்
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அமெரிக்க அதிபர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்தத்திற்கு வருமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. முதல்கட்ட பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெற்றது. 2ஆவது கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் உதவும்படி ரஷியாவிடம் ஈரான் ஆதரவு கோரியுள்ளது.
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதுதொடர்பாக கூறுகையில் "ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்காய் லாரோவ் உடன் ஓமனில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை குறித்து பேசினேன். 2015ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டு, ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டதற்கு ரஷியா முக்கிய பங்கு வகித்ததற்காக பாராட்டு தெரிவித்தேன்.
எந்தவொரு புதிய ஒப்பந்தத்திற்கும் ரஷியா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்துபோது அமெரிக்கா- ஈரான் இடையே அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது. ஈரான் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த முறை டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அணு ஆயுத தயாரிப்புக்கான அனைத்து கட்டுப்பாட்டையும் கைவிட்டு, யுரேனியத்தை செரிவூட்டும் பணியைத் தொடங்கி 60 சதவீதமாக ஆக்கியது. ஆனால் 90 சதவீதம் செரிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால்தான் அணுஆயுதம் தயாரிக்க முடியும். இந்த நிலையில்தான் அமெரிக்கா ஒப்பந்தத்திற்கு வற்புறுத்தியுள்ளது.
ரஷிய அமைச்சர் லாவ்ரோவ் மத்தியஸ்தராகவும், உதவி செய்யவும் ரஷியா தயாராக உள்ளதாக தெரிவித்தார்.