• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம்

சினிமா

" நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.

எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.

அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.

அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.

அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.

தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.

தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தார் . பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார்.

அண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், "அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.

தன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''

- புலவர் புலமைப்பித்தன் , நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து .

Leave a Reply