ஸ்ரீ தலதா யாத்திரை சுகாதார பாதுகாப்பு தொடர்பான அப்டேட்
இலங்கை
ஸ்ரீ தலதா யாத்திரை பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக 50 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் செயற்பாட்டிற்கு இணங்க கண்டி மாநகர சபையின் பிரதான நகர சுகாதார வைத்திய அதிகாரிகளின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சகல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
நகரின் சகல உணவு தயாரிப்பு நிலையங்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் பரிசோதனை செய்யப்படுவதுடன் அதன்படி உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
இக்காலப் பகுதியில் இடம்பெறும் சகல விதமான அன்னதானங்களும் கண்டி மாநகர சபையின் சுகாதாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், அந்த சகல அன்னதானங்கள் மற்றும் வீதி உணவு வழங்கும் இடங்கள் தொடர்ந்தும் பொதுச்சுகாதாரப் பரிசோதர்களினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
கண்டி நகரை சுத்தமாகவும் அலங்காரமாகவும் வைத்திருப்பதற்காக பொதுச் சுகாதாரப் பரிசோதர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ், முறையாகக் கழிவுகளை அகற்றும் செயற்பாடு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பதற்காக, கழிவுகளை உரிய இடங்களில் இடுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதர்களின் சங்கம் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பக்தர்களின் சுகாதார நடவடிக்கைகளுக்காக 150 நடமாடும் மலசல கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் கழிவுகளை அகற்றும் செயற்பாடு நகரக் கழிவு நீர் அகற்றும் திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும்.
பக்தர்களின் குடிநீர் அவசியத்திற்காக முறையான நீர் விநியோகம் 24மணி நேரமும் செயற்படுத்தப்படுவதுடன், அந்த நீரின் பாதுகாப்பு ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பரிசோதனை செய்யப்படும்.
பாதுகாப்பு பிரிவின் அங்கத்தவர்களின் தங்குமிடம் அமைந்துள்ள இடங்களில் சுகாதார செயற்பாடுகள், உணவு விநியோகம், தொற்று நோய்த் தடுப்பு போன்றவை குறித்த தொடர்ச்சியான கண்காணிப்பிற்காகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தலைமையில் சுகாதாரக் குழு ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
























