• Welcome to TamilsGuide
செய்திகள் 1

VAT விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவிப்பு

இலங்கை

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் திரவ பால் மற்றும் தயிர் மீதான VAT வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி அதற்கு ஒப்புதல் அளித்தார்.

அதன்படி, தொடர்புடைய சட்டம் அந்தத் திகதியில் அமலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல வரித் திருத்தங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் நாப்தா மீதான VAT வரியும் நீக்கப்பட்டுள்ளதாக இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் படி, வெளிநாடு வாழ் தனிநபர்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு VAT விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு VAT பொருந்தும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply