புங்குடுதீவு பெருங்காடு சிவன்கோவில் ஆதீன தர்மகர்த்தா ஶ்ரீமதி லோகேஸ்வரியம்மா சின்னமணிக்குருக்கள் சிவன் திருவடியில் இணைந்தார் .
கனடா
புங்குடுதீவு பெருங்காடு சிவன்கோவில் ஆதீன தர்மகர்த்தா ஶ்ரீமதி லோகேஸ்வரியம்மா சின்னமணிக்குருக்கள் சிவன் திருவடியில் இணைந்தார் .
இலங்கைப் பிராமண சமூகத்தில் பெண்கள் கோவில் ஆதீன கர்த்தர்களாக இருந்து, சிறப்பாகப் பணியாற்றியவர்களில், புங்குடுதீவு சிவன் கோவில் அம்மாக்களுக்கு முக்கிய இடமுண்டு. ஶ்ரீமதி லோகாம்மா சின்னமணிக்குருக்கள், அவரது தாயார் ஶ்ரீமதி பரமேஸ்வரியம்மா மீனாக்ஷி சுந்தரேஸ்வரக் குருக்கள், அதற்கும் முன்னதாக மீனாக்ஷி சுந்தரேஸ்வரக் குருக்கள் அவர்களது தாயார் என, இந்தச் சிவப்பாரம்பரியம் தலைமுறைகள் கண்டது.
பரமேஸ்வரி அம்மா காலத்தில் புங்குடுதீவுச் சிவன் கோவில் கண்ட எழுச்சியும் வளர்ச்சியும் சிறப்பானது. அதற்கான அவர்களது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினை நேரில் கண்டு வியப்புற்றிருகின்றோம். அவருக்குப் பின், இடர் மிகுந்த காலத்தில், பல்வேறு இழப்புக்களின் துயர்களுக்கு மத்தியிலும் அந்தப் பணிகளை தனி ஒரு மனுஷியாக முன்னெடுத்துத், தன் பேரக்குழந்தைகளை ஒருங்கமைத்துச் சிவப்பணிகளை அவர்களிடம் ஒப்படைத்து, அதன் சிறப்புக்களில் மனம் திளைத்திருந்தவர் லோகாம்மா.
சின்னன்ணை என நாம் அழைக்கும் மாமா, நாகேந்திரக்குருக்கள் (சின்னமணிஐயா) எம்மீது காட்டிய அன்புக்கும், கரிசனைக்கும் சற்றும் குறைவில்லாத பாசத்தினை எங்கள் மீது காட்டியவர் லோகா அத்தை. அதேபோல் எங்கள் மாமானார் இரத்தினசபாபதிக் குருக்களிடம் மிகுந்த மரியாதையினையும், அன்பினையும் கொண்டிருந்தவர். மாமாவின் கோவில் விஷேடங்களில் மட்டுமன்றி தன் அயலில் உள்ள அத்தனை ஆலயங்களின் முக்கிய நாட்களில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கும் பண்பினைக் கொண்டிருந்தவர்கள்.
ஐயரம்மா மறைந்துவிட்டார் எனச் சொல்லி அகலமுடியாத வண்ணம், தாம் வாழும் மண்ணின் சமூகப் பணிகளிலும் அக்கறைமிக்கவர்களாக இருந்தவர்கள் இவர்கள். சமூக வலைத்தளங்களின் தொடர்புகள் அதிகம் இல்லாத காலத்திலேயே சமூகத்துடன் மிக நெருக்கமாக இருந்து சமயப்பணியாற்றிய பெண்கள். போராட்ட காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், தாயகப் பற்றுடன் அவர்கள் ஆற்றிய விடயங்கள் பல வெளித்தெரியாதவை. இறுதியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்களை நேரில் சந்தித்போது, அவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து கண்கலங்கினார். இம்முறை எங்கள் பயணக்காலத்தின் குறைவால் நேரில் சென்று சந்திக்க முடியவில்லை. இனி ஒருபோதும் சந்திக்க முடியாது என்னும் பெருவலியை இன்றைய காலை தந்திருக்கிறது.
சிவப்பணியை எப்போதும் சிந்திருந்த லோகாம்மாவின் ஆன்மா பெருங்காடு கிராஞ்சியம்பதி மீனாக்ஷி சுந்தரேஸ்வரப் பெருமான் திருவடிகளில் சாந்தியுறப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் மகள் ஹர்சினி ராகவகுருக்கள் , பேரன் சிவகஜன் சிவப்பிரியன் ஆகியோருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்
தகவல் மகள் ஹர்சினி
647 657 8470






















