கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்ற கலைவாணர் என்.எஸ்.கே.
சினிமா
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவோருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் எம்ஜியார் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் தாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.
‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்."
- கவியரசு கண்ணதாசன் , ( 25-10-1956 ,தென்றல் இதழில் )






















