ஹெலிகாப்டர் விபத்தில் Siemens நிறுவன CEO குடும்பத்துடன் உயிரிழப்பு..
அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் மேலே செல்லும்போது நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.
லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.
இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பமும், விமானியும் அடங்குவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் Siemens நிறுவனத்தின் ஸ்பெயின் நாட்டு தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மெர்ஸ் காம்ப்ருபி மொண்டல் மற்றும் 4, 5 மற்றும் 11 வயதுடைய அவர்களது மூன்று குழந்தைகளுடன் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 36 வயதான விமானியும் உயிரிழந்தார். சீமென்ஸ் உலகளவில் கிளைகள் கொண்ட பிரபல ஜெர்மானிய பொறியியல் நிறுவனம் ஆகும். கொல்லப்பட்ட சிஇஓவும் அவரது குடும்பத்தினரும் சுற்றுலாவுக்காக ஸ்பெயினில் இருந்து அமெரிக்கா வந்திருந்தனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த தருணத்தின் கடைசி நிமிட வீடியோவும் வெளியாகி உள்ளது.























