
அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்
இலங்கை
ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் மற்றுமொரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை ஒன்று இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இதனிடையே, அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவது தொடர்பான வீடியோவை அட்லி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். ஆனால் படம் தொடர்பான எந்த தகவலையும் அவர் கூறவில்லை.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளான இன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லி எக்ஸ் தள பக்கத்தில், அல்லி அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.