Test திரைப்படம் வொர்த்தா? இல்லையா?
சினிமா
'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் டெஸ்ட். இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் ஆராய்ச்சியாளராகவும், நயன்தாரா மாதவனின் மனைவி மற்றும் ஆசிரியராகவும் நடித்து இருக்கிறார்கள்.
இந்த மூன்று பேரும் தங்களுக்கு கிடைத்த இறுதி வாய்ப்பை தவறவிடாமல் நிரூபிக்க போராடுபவர்களாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். ஆராய்ச்சிக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தில் மாதவன் அட்டகாசப்படுத்தி உள்ளார். மனைவி நயன்தாராவுடன் காதல், சித்தார்த்தை மிரட்டும் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
பாசமான மனைவியாக நயன்தாரா கவருகிறார். அவரது அழகான சிரிப்பும், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும் ரசிக்க வைத்து இருக்கிறது. கிரிக்கெட் வீரராக வரும் சித்தார்த், நேர்த்தியான நடிப்பால் சிலிர்க்க வைக்கிறார். கிரிக்கெட்டுக்காக அவர் செய்யும் விஷயங்கள் எதார்த்தம்.
கிரிக்கெட் போட்டியை களமாக கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் சஷிகாந்த். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சியை கடைசி வரை மேற்கொள்ள வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆனால் படத்தின் திரைக்கதை மெதுவாக செல்வது பலவீனமாக அமைந்துள்ளது. திரைக்கதை விறுவிறுப்பாக இருந்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.






















