
பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு - சட்டத்தரணிகள் சங்கம் கவலை
இலங்கை
கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அதிகாலை அதிகாலை வெலிக்கடை சிறைச்சாலையின் தடுப்புக் காவலில் இருந்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
காவலில் இருந்தபோது அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான காயங்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், அவை குறித்த இளைஞன் தானே ஏற்படுத்திக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் அவர் சரியான மனநிலையில் இல்லை என்றும் வெலிக்கடை பொலிஸார் கூறுகின்றனர்.
எவ்வாறெனினும், கடுமையான காயங்களுக்கு உள்ளான இளைஞன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.
இந்த நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய, சம்பவம் அறிக்கையிடப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் சட்ட அமலாக்க பொறுப்புக்கூறல் மற்றும் பொது நம்பிக்கை மீதான பரந்த தாக்கங்கள் குறித்து சங்கத்தின் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த சம்பவம் குறித்து உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பான முன்னேற்றங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும், மேலும் உரிய நடைமுறை பின்பற்றப்படுவதையும் சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்படுவதையும் உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கை பொலிஸ் உட்பட சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்கள் மிகுந்த அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று பல தசாப்தங்களாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து எச்சரித்து வருவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.