• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இலங்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமான அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் சற்று முன்னர் திறந்து வைத்தனர்.

இந்தத் திட்டம் வடக்குப் பாதையின் மஹோ-அனுராதபுரம் பிரிவில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவுவதை உள்ளடக்கியது.

முன்னதாக, இந்தியப் பிரதமர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி,

அனுராதபுரத்தில் உள்ள ஜய ஶ்ரீ மகா போதியில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தேன்.

பௌத்தமதத்தின் அதி சிறப்புமிக்கதும் மதிப்புக்குரியதுமான ஸ்தலங்களில் ஒன்றான இத்தலத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது உண்மையில் மிகவும் பணிவுக்குரிய தருணமாகும்.

அமைதி, ஞானம் மற்றும் ஆன்மீக நீட்சியின் வாழும் குறியீடாக இத்தலம் திகழ்கின்றது. புத்தபெருமானின் போதனைகள் எப்போதும் எமக்கு வழிகாட்டட்டும் என்றார்.

மேலும் மற்றொரு பதிவல், அநுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம்.

அதேபோல மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு பொறிமுறையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட சமிக்ஞை தொகுதி திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்தி பயணத்தின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான ஆதரவை நல்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கின்றது – என்றார்.
 

Leave a Reply