
எம்புரான் பட தயாரிப்பாளர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை
சினிமா
'எம்புரான்' படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எம்புரான்' கடந்த 27ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
படம் வெளியானதுமுதல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அதற்கு காரணம் படத்தில் 2002 இல் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற குஜராத் கலவரத்தை மையப்பையடுத்திய காட்சிகளும், வில்லனும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இதனால் ஏற்பட்ட அழுத்தத்தினால் படத்தின் சில காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. நடிகர் மோகன்லாலும் தனது சமூக ஊடகப் பதிவில் இதற்கு வருத்தம் தெரிந்தார். பிருத்விராஜை தேசவிரோதி என ஆர்எஸ்எஸ் பத்திரிகை விமர்சித்தது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ கோகுலம் குழும நிறுவனங்களின் உரிமையாளர் கோகுலம் கோபாலனின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக எழுந்த புகார் தொடர்பாக சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் கொச்சியில் உள்ள கோகுலம் நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எம்புரான் பட சர்ச்சைக்கும் இந்த விசாரணைக்கும் தொடர்பில்லை என விளக்கமளித்துள்ள அமலாக்கத்துறையினர், இந்த விசாரணை முழுக்க அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பான மட்டுமே என தெரிவித்தனர்.