
நந்திக்கடல் களப்பில் குழப்பநிலை - கைவிலங்குடன் ஒருவர் தப்பியோட்டம்
இலங்கை
நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்ற நிலையில் அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது நேற்று குழப்பநிலை ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் ஒரு சந்தேக நபர் கைவிலங்குடன் தப்பியோடியுள்ளார்.
நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடற்தொழில் திணைக்களம், வட்டுவாகல் கடற்படை, கடற்தொழில் இணையம், கடற்தொழில் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வட்டுவாகல் களப்பில் நேற்று 50 வலை தொகுதிகளும், 9 படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு வலை, படகுகளின் உரிமையாளர்கள் 50க்கு மேற்பட்டோர் வட்டுவாகல் பாலத்தடியில் ஒன்று கூடியதனை தொடர்ந்து குறித்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
இதனால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அத்தோடு கைது செய்யப்பட்ட ஒரு நபர் கைவிலங்குடன் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்தே இன்றையதினம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அவ்விடத்திற்கு பொலிஸார், விஷேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மந்துவில், வலைஞர்மடம் புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஐவரையும் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு கைவிலங்குடன் ஓடிய நபரை கைது செய்ய திறந்த பிடியாணையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.