மீண்டும் திருக்குறளில் உறுதிமொழியேற்று அமைச்சரான கனடியத் தமிழர் விஜய் தணிகாசலம்
கனடா
19.03.2025 புதன்கிழமையன்று ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களால் விஜய் தணிகாசலம் அவர்கள் சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தணிகாசலம் அவர்கள் மூன்று முறை ஒன்ராறியோ மாநிலத்தின் ஸ்காபரோ - றூஜ் பார்க் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் மூன்று முறை இணை அமைச்சராகவும் பொய்யாமொழிப் புலவரின் உலகப் பொதுமறையாம் 'திருக்குறள்' மீது பதவியேற்பு உறுதிமொழி எடுத்து தனது பதவிகளை ஏற்றிருந்தார். புலம்பெயர்ந்த கனடியத் தமிழர்களின் வரலாற்றிலும், தெற்காசியாவிற்கு வெளியேயுள்ள தமிழர்கள் மத்தியிலும் திருக்குறள் மீது தனது பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்ட ஒரே அரசியல்வாதியாக விஜய் தணிகாசலம் அவர்கள் மட்டுமே விளங்குகிறார் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
இவர், 2018ஆம் ஆண்டு ஸ்காபரோ றூஜ் பார்க்கின் முதலாவது தமிழ், மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவாகி வரலாறு படைத்தார். அத்துடன், மீண்டும் 2022ஆம் ஆண்டு பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அதே பகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023இல் போக்குவரத்துத் துறைக்கான இணை அமைச்சராகப் பதவி உயர்த்தப்பட்ட இவர், 2024இல் வீட்டுவசதித்துறைக்கான இணை அமைச்சராகப் பதவியேற்று, இன்று சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக சமூகத்துக்கான தனது அர்ப்பணிப்புடனான பணியைத் தொடங்குகிறார்.
ஸ்காபரோ நிலக்கீழ் தொடரிவழித்தட விரிவாக்கம், அப்பகுதியில் முதலாவது மருத்துவப் பள்ளியை நிறுவியமை, ஸ்காபரோ சுகாதாரக் கட்டமைப்பின் மீள்மேம்பாடு போன்ற பல மாற்றங்களைத் தனது பிரதேசத்தில் கொண்டுவந்ததில் விஜய் முக்கிய பங்காற்றியுள்ளார். அத்துடன், 2023ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்துத்துறையில் கொண்டுவரப்பட்ட 'ஒற்றைக் கட்டணத்' திட்டத்தைத் தொடக்கி வைத்ததன் மூலம், பயணச் செலவினைக் குறைத்து, பயணிகள் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 1600 டொலர்களைச் சேமிப்பதற்கான வழியினையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
14 வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்த ஓர் ஈழத்தமிழ் மகன் இன்று கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் அமைச்சராகப் பதவிவகிப்பதுடன் தமிழ் சமூகத்தின் அடையாளமாகவும் ஒன்ராறியோ மக்களினது குரலாகவும் கடமையாற்றுவதையிட்டு நாம் அனைவரும் பெருமையடைகின்றோம்.






















