
யாழ். குடத்தனை கிராமத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், விவசாயிகள் பாதிப்பு
இலங்கை
யாழ்., பருத்தித்துறை, குடத்தனை கிராமத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையால் இவ்வாறு கழிவுகள் கொட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், பருத்தித்துறை நகரசபைக்கு ஏற்கனவே முறைப்பாடளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பருத்தித்துறை நகரசபை செயலாளரை தொடர்புக்கொண்டு நாம் வினவியபோது, விவசாயிகளின் நலன் கருதி, குறித்த பகுதியில் கழிவுகள் கொட்டுவதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகள் அப்பகுதியில் இருந்து அகற்றப்படாமல் உள்ளதாகவும், இதனால் சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நகரசபையால் இங்கு கொட்டப்பட்ட கழிவுகளில் பொலித்தீன் மற்றும் அபாய கழிவுப்பொருட்களும் காணப்படும் நிலையில், இவற்றை விலங்குகள் உட்கொண்டால், அவற்றின் உயிர்களுக்கும் ஆபத்து எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.